இனி, ஜார்வோவை தடுக்க வேண்டியது இந்திய அதிகாரிகளின் கைகளில் உள்ளது : ஐசிசி அறிவிப்பு  

By 
jarvo

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரம் முன்பாக திடீரென 'ஜார்வோ 69' என்ற பெயரில் இந்திய அணியின் ஜெர்சி அணிந்த நபர் மைதானத்துக்குள் ஓடி வந்த நிகழ்வால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

விராட் கோலியை நோக்கி ஓடிய அந்த நபரை பாதுகாவலர்கள் தடுத்து அழைத்துச் சென்றனர். எனினும், பாதுகாவலர்களை மீறி அந்த நபர் விராட் கோலி மற்றும் சிராஜிடம் சில நொடிகள் பேசினார். இதன்பின் பாதுகாவலர்கள் அவரை மைதானத்தைவிட்டு வெளியேற்றினர். அந்த நபரால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யார் இவர்? - ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் ஒரு யூடியூப் சேனல் உரிமையாளர். ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் நடத்தும் யூடியூப் சேனலுக்கு 1.23 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். ஜார்வோவின் நோக்கம் வீரர்களுக்குத் தொந்தரவு கொடுப்பது அல்ல, வீரர்களுக்கு வாழ்த்து சொல்வது. அவர்களுடன் உரையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜார்வோ, கனடாவில் பிறந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இந்திய அணியின் தீவிர ரசிகரான ஜார்வோ, இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மைதானத்துக்குள் புகுந்து தன்னையும் இந்திய அணி வீரர் எனக் கூறிக்கொண்டு மற்ற வீரர்களை போலவே களத்தில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

முன்பு, போலீஸார் அவரை கைதுசெய்த நிகழ்வுகளும் நடந்தன. இந்த ஜார்வோவின் சேட்டை தற்போது சென்னை சேப்பாக்கம் வரை நீண்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஜார்வோவின் சேட்டைகளை படம் பிடித்து இங்கேயும் ஜார்வோ வந்துவிட்டார் என கமெண்ட்களை தட்டிவிட்டுவருகின்றனர்.

கேலிக்கு அப்பால், இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஜார்வோவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. “2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைவரின் பாதுகாப்புக்கும் நாங்கள் முன்னுரிமை அளிப்போம். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அது மீண்டும் நிகழாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம்.

சர்ச்சைகளில் சம்பந்தப்பட்ட நபர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இனி அவரை தடுக்க வேண்டியது இந்திய அதிகாரிகளின் கைகளில் உள்ளது” என்று ஐசிசி செய்தித் தொடர்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Share this story