ஹர்த்திக், சுப்மன் கில்லுக்கு ஓய்வு : கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பனிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக ஹர்த்திக் இருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தெரிவித்தன.