உலகக்கோப்பை இறுதிக்கு வர காரணமே அவர்தான்; நிச்சயம் வெல்வோம்: ரோகித் சர்மா உறுதி

By 
rs6

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், அகமதாபாத் மைதானத்தில் குவியவுள்ள 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக அமர வைப்பதை தவிர வேறு எதுவும் மனநிறைவை தராது. ரசிகர்கள் சத்தமில்லாமல் அமர வைப்பதே ஆஸ்திரேலியா அணியின் இலக்கு என்று கூறியுள்ளார். 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி மைண்ட் கேமை தொடங்கியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 

நான் கேப்டன் பொறுப்பை ஏற்ற நாள் முதல் இந்த நாளுக்காக 2 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். 2 ஆண்டுகளாக ஒவ்வொரு வடிவத்திற்கான கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு வீரர்களை கண்டறிந்தோம். ஒவ்வொரு வீரரின் ரோல் குறித்து விரிவாக விளக்க ஏராளமான முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம். 

ஒவ்வொரு வீரரின் மனநிலை மற்றும் ரோல் பற்றி சிறப்பாக புரிய வைத்துள்ளோம் என்று நினைக்கிறேன். நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற அதுவும் ஒரு காரணம். ஆஸ்திரேலியா அணியை பற்றி நன்றாக அறிவோம். தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார்கள். நிச்சயம் ஆஸ்திரேலியா அணி ஒரு முழுமையான அணியாகவே பார்க்கிறேன். 

ஆனால் நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் தான் கவனம் குவித்துள்ளோம். அதனால் அவர்களின் ஃபார்ம் பற்றி எந்த கவலையும் இல்லை. எங்களின் திட்டங்களில் மட்டுமே கவனமாக இருக்கிறோம். ரசிகர்கள் மத்தியில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் நாங்கள் அதுகுறித்து யோசித்து அழுத்தத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. 

இந்திய அணி வீரராக இருந்தால், நிச்சயம் களத்திற்கு வெளியில் இருந்து வரும் அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டும். உலகக்கோப்பை தொடரில் எங்களின் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். முதல் 4 போட்டிகளில் சேஸிங் செய்தோம். அடுத்த 5 போட்டிகளில் எதிரணியால் ஒருமுறை கூட 300 ரன்களை எட்ட முடியவில்லை. இந்திய ஆடுகளங்களில் இப்படி செயல்படுவது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக அறிவேன். 

பும்ரா, ஷமி, சிராஜ் அனைவரும் அற்புதமாக செயல்பட்டுள்ளார்கள். அதேபோல் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்கள். எங்கள் அனைவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் மிக முக்கிய தருணம் இது. ஏனென்றால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு எளிதாக கிடைக்காது. 

நான் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பார்த்து வளர்ந்தவன். அதனால், தனிப்பட்ட அளவிலும் இது எனக்கு முக்கியமான தருணமாக கருதுகிறேன். கடந்த 2 ஆண்டுகளில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிகள் மிகப்பெரியது. அவரின் கிரிக்கெட்டுக்கும், நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 

ஆனாலும், நாங்கள் சொல்லும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்திய அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உலகக்கோப்பையை அவருக்காகவும் வெல்ல விரும்புகிறோம்' என்றார்.


 

Share this story