ஐபிஎல் வீரர்களை தக்கவைக்க, அணி நிர்வாகம் எவ்வளவு செலவழிக்கலாம்? பிசிசிஐ அறிவிப்பு

How much can team management spend to retain IPL players BCCI announcement

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 10 அணிகள் பங்கேற்கின்றன. 

ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ரூ. 90 கோடி :

இந்நிலையில், ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ரூ.90 கோடி வரை ஏலத்தில் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். 

3 இந்தியர், ஒரு வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில், தக்க வைத்துக்கொள்ளலாம்.

புதிய இரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை (2 இந்தியர், ஒரு வெளிநாட்டு வீரர்) தேர்வு செய்து கொள்ளலாம்.

தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்களுக்கான சம்பள விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.42 கோடி வரை செலவிடலாம்.

3 வீரர்களுக்கு ரூ.33 கோடியும், 2 வீரர்களுக்கு ரூ.24 கோடியும், ஒரு வீரருக்கு ரூ.14 கோடியும் செலவழிக்கலாம். மொத்தம் உள்ள ரூ.90 கோடியில் இதன் பங்களிப்பு இருக்கும்.

30-ந்தேதிக்குள் :

ஒரு அணி 4 வீரர்களையும் ரூ.42 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டால் ஏலத்தில் ரூ.48 கோடி வரை மட்டுமே செலவழிக்க முடியும்.

ஒரு அணியில் 4 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டால், அந்த அணியின் முதல் வீரருக்கான தொகை ரூ.16 கோடியாக இருக்கும். 2-வது, 3-வது, 4-வது வீரர்களுக்கு முறையே ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வழங்கப்படும்.

அதே நேரத்தில், 3 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.15 கோடியாக இருக்கும். அதற்கடுத்து ரூ.11 கோடி மற்றும் ரூ.7 கோடி வழங்கப்படும். அந்த அணி ஏலத்தில் ரூ.57 கோடி வரை மட்டுமே செலவிட முடியும்.

2 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.14 கோடியாக இருக்கும். அடுத்த வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். ஏலத்தில் ரூ.66 கோடி வரை செலவிட முடியும்.

ஒரு வீரரை தக்கவைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டும். அப்போது ஏலத்தில் ரூ.74 கோடி வரை வீரர்களை வாங்கலாம்.

8 அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 1 முதல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். 

2 புதிய அணிகளும், டிசம்பர் 1 முதல் 25-ந் தேதிக்குள் 3 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கலாம். ஜனவரி தொடக்கத்தில் ஏலம் நடைபெறும்.
*

Share this story