உலகக்கோப்பை கிரிக்கெட்: டேரில் மிட்செல் சதமடித்து அசத்தல், நியூசிலாந்து நிதான ஆட்டம்..

நடப்பு உலக கோப்பை தொடரின் 21வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 42 ஓவர் முடிவில் 226 ரன்களைச் சேர்த்து பொறுமையாக ஆடி வருகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர்.
பும்ராவின் முதல் ஓவரில் இந்த இணை ரன் எதுவும் எடுக்காததால் மெய்டன் ஆனது. ஆட்டத்தில் 4ஆவது ஓவரை வீசிய பும்ரா, டெவோன் கான்வேவை டக்அவுட்டாக்கினார். பவர்ப்ளேவுக்குள் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்தது. அடுத்து முஹம்மது சமி வீசிய 9வது ஓவரில் வில் யங் 17 ரன்களில் விக்கெட்டாகி வெளியேறினார். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
3வது விக்கெட்டுக்கு கைகோத்த ரச்சின் ரவீந்திரன் - டேரில் மிட்செல் இணை இந்தியாவின் பவுலிங்கை பதம் பார்த்தது. கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இந்த பார்ட்னர்ஷிப்பை முஹம்மது சமி உடைத்தார். 34வது ஓவரில் ரச்சின் ரவீந்திரன் 75 ரன்களில் அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த டாம் லாதம் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மறுபுறம் நின்று ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்த நியூசிலாந்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். விக்கெட்டுகள் இழப்பை தவிர்த்து டேரில் மிட்செல் - க்ளென் பிலிப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.