உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வீட்டுக்கு போக வேண்டிய நிலையில், இங்கிலாந்து அணி.?

By 
inin

2019 உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு அந்த அணி முன்னேற 99 சதவீதம் வாய்ப்பே இல்லை என்பது தான் அதற்கு காரணம்.

2023 உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தங்கள் உலகக்கோப்பை அணி அறிவிப்பாலேயே கதிகலங்க வைத்தது இங்கிலாந்து அணி. அந்த அளவுக்கு அணி முழுவதும் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல் - ரவுண்டர்கள் நிரம்பி வழிந்தார்கள்.

எந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்றால் அந்த அணியின் 10 விக்கெட்களை கைப்பற்றினால் மட்டுமே அது நடக்கும் என்ற பேச்சும் அப்போது இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக தற்போது உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மட்டுமே தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் 10 விக்கெட்களையும் இழந்த அணியாக உள்ளது. அதுவே அந்த அணி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி அடையவும் காரணம். இங்கிலாந்து அணி நல்ல வீரர்களை தேர்வு செய்த போதும் அந்த அணியின் உலகக்கோப்பை திட்டம் போன்ற ஒரு மட்டமான திட்டம் வேறு எந்த அணியிடமும் இல்லை.

எந்த பந்தையும் பார்த்த உடன் பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டு ஆடினார்கள் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள். விக்கெட்களை அவர்களாகவே தாரை வார்த்து மண்ணைக் கவ்வினார்கள். அதில் தான் அந்த அணிக்குள் போட்டி நிலவியது.

இந்த சூழ்நிலையில், ஐந்தில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற அந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற வேண்டும்.

தற்போது முதல் நான்கு இடங்களில் இந்தியா (10 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (8 புள்ளிகள்), நியூசிலாந்து (8 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (6 புள்ளிகள்) உள்ளன. இந்த நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லீக் சுற்றில் ஆட வேண்டும். அந்தப் போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் இங்கிலாந்து அரை இறுதி வாய்ப்பு பறிபோகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே உச்சகட்ட பார்மில் உள்ளன. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்த மூன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும், ஆஸ்திரேலியா தான் ஆடும் மீதமுள்ள லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் 8 புள்ளிகளை பெறும்.

இங்கிலாந்து அணி தான் இனி ஆடும் மீதமுள்ள நான்கு லீக் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே 8 புள்ளிகள் பெறும். அப்போதும் அந்த அணியின் நெட் ரன் ரேட் ஆஸ்திரேலியாவை விட மேலே வர வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்த காரணங்களால் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு போவது மிகவும் கடினம். அக்டோபர் 29 அன்று இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியின் அந்த 1 சதவீத அரை இறுதி வாய்ப்புக்கு முடிவுரை எழுதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story