உலகக்கோப்பை கிரிகெட் தொடர்: இந்தியா- பாகிஸ்தான்.. சில நிகழ்வுகள்..

2023 உலகக்கோப்பை தொடரில், அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என சில நம்பகமற்ற தகவல்கள் வலம் வருகின்றன.
சில வட இந்திய செய்தி ஊடகங்களில் கூட இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அது சாத்தியமா? அது குறித்து ஆராய்ந்து பார்த்தால் அதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.
குறிப்பாக வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்திய பின் அதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. அது எப்படி சாத்தியம் என பார்ப்போம்.
பாகிஸ்தான் அணி தான் ஆடிய ஏழு போட்டிகளில் நான்கு மோசமான தோல்விகளும், மூன்று வெற்றிகளும் பெற்றுள்ளது. மூன்று வெற்றிகள் மூலம் 6 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் பெரிய வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதி செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், அது எல்லாமே மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் தான் சாத்தியம் ஆகும்.
தற்போது வங்கதேசம் தவிர மீதமுள்ள ஒன்பது அணிகளும் அரை இறுதி செல்லும் வாய்ப்பை இழக்காமல் உள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அரை இறுதி செல்ல வேண்டும் என்றால் அந்த அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் மொத்தம் 10 புள்ளிகளை பெற வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளில் ஒரு அணி தனக்கு மீதமுள்ள அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 8 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருக்க வேண்டும். இது எல்லாமே சாத்தியமே.
மேலே கூறியது போல மற்ற அணிகள் குறைவான வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் பெரிய வெற்றிகளை பெற்றால், 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பெற முடியும். இந்திய அணி தற்போது தான் ஆடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா இன்னும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெறும் அணியும், நான்காம் இடம் பெறும் அணியும் அரை இறுதியில் மோதும்.
அந்த வகையில் லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான் அணி நான்காம் இடம் பெற்று, இந்தியா முதல் இடத்தில் இருந்தால் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டி நடப்பது சாத்தியமே.