உலகக் கோப்பை போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுல்-சஞ்சு சாம்சன் நிலை?

By 
klr11

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்கள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்திருந்தது. மேலும் காயம் ஏதேனும் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது. இது தொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இலங்கையில் ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முழு உடல் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டதால் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெறுகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.

இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார். லோகேஷ் ராகுல் அணியில் இடம் பெறுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. அவர் அணியில் இடம் பெறமாட்டார். இதே போல பேட்ஸ்மேன்களில் திலக் வர்மாவும் வேகப் பந்து வீரர்களில் பிரஷித் கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.

வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அல்லது செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:- ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ்.

 

Share this story