உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டம்: ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் சச்சின் சந்திப்பு..

இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் அடுத்த 2 இடத்திற்கான ரேஸில் இடம் பெற்றுள்ளன. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கவே மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தா அணியானது, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு அமையும். அதில் ஒன்று தான் தற்போது நடந்து வருகிறது. 2ஆவது போட்டி வரும் 10 ஆம் தேதி நடக்கிறது. இதில், தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் ஆலோசகரான இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து பேசியுள்ளார். வலைபயிற்சிக்கு நடுவில் வீரர்களை ஒன்றாகவும், தனித்தனியாகவும் சந்தித்து பேசி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.