உலகக் கோப்பை : சென்னையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு  டிக்கெட் விற்பனை..

 

By 
rt2

13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்கான சில போட்டிகள் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நேற்று வெளியிட்டது.

அதன்படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ள 9 ஆட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி நடக்கிறது.

இதேபோல இந்தியா-நெதர்லாந்து அணிகள் நவம்பர் 12-ந் தேதி மோத இருந்த போட்டி நவம்பர் 11-ந் தேதியில் நடக்கிறது. மேலும் பாகிஸ்தான்-இலங்கை, பாகிஸ்தான்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டிகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந் தேதி தொடங்கும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்தியா அல்லது மற்ற அணிகளுக்கான டிக்கெட்டுகள் அன்று முதல் விற்பனையாகிறது. இந்தியா மோதும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 முதல் விற்பனையாகும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி எதிர் கொள்கிறது. அதை தொடர்ந்து 11-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும், (டெல்லி), 19-ந் தேதி வங்காளதேசத்துடனும் (புனே) மோதுகிறது.

இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி விற்பனையா கிறது. இந்திய அணி அக்டோபர் 22-ந் தேதி நியூசிலாந்துடனும் (தர்மசாலா), இங்கிலாந்துடன் 29-ந் தேதியும் (லக்னோ), இலங்கையுடன் நவம்பர் 2-ந் தேதியும் (மும்பை) மோதுகின்றன. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் நவம்பர் 5-ந் தேதி (கொல்கத்தா), நவம்பர் 12-ந் தேதி நெதர்லாந்துடன் (பெங்களூர்), மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 2-ந் தேதி விற்பனையாகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ந் தேதி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந் தேதி விற்பனை ஆகும்.

அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது. இந்திய அணி திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 30-ந் தேதி விற்பனை செய்யப்படும்.

டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இது டிக்கெட் வாங்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story