விராட்கோலி மட்டும் இல்லையென்றால், என்னால் வந்திருக்க முடியாது : யுவராஜ் சிங்

By 
yuva

யுவராஜ் சிங், 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் இல்லையென்றால் 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இந்திய அணி டி20 மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்க முடியாது என்றே கூறலாம்.

கிரிக்கெட்டின் உச்சியில் இருந்தபோது திடீரென எற்பட்ட புற்றுநோய் பாதிப்பு, யுவராஜ் சிங்கின் மொத்த வாழ்க்கையும் புரட்டி போட்டது. அங்கிருந்து மீண்டும் கிரிக்கெட்டை தொடங்கி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது, பழைய ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான 2014-ம் ஆண்டு டி20 உலக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் யுவராஜ் சிங் மீண்டும் கோலி கேப்டன்சியில் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் இந்திய அணிக்கு என்னால் திரும்ப வந்திருக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் இந்திய அணிக்கு திரும்ப வந்ததற்கு முக்கிய காரணமே விராட்கோலி தான். விராட் கோலி கேப்டனாக இருந்து தனக்கு ஆதரவு கொடுத்ததன் மூலமாகத்தான் இந்திய அணிக்கு தன்னால் திரும்ப வர முடிந்தது.

விராட் கோலி மட்டும் இல்லையென்றால் தன்னால் இந்திய அணிக்கு திரும்ப வந்திருக்க முடியாது. 2011 உலகக் கோப்பை வரை, டோனி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நீ தான் என் முக்கிய வீரர் எனவும் கூறியிருந்தார். ஆனால் 2019-ம் ஆண்டு உலககோப்பை அணியில் என்னை தேர்வு செய்ய தேர்வு குழு விரும்பவில்லை எனவும், டோனி வெளிப்படையாக என்னிடமே கூறினார். என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களும், 10 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 304 போட்டிகளில் விளையாடி 8701 ரன்களும், 111 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதே போன்று 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களும், 29 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். அவர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 -ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.


 

Share this story