சென்னையில், பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

By 
pragg

பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். அத்துடன் தமிழக விளையாட்டுத்துறை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்களும் வரவேற்க திருண்டு இருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் வந்தடைந்த பிரக்ஞானந்தா, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.
 

Share this story