வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றிபெற 257 ரன்கள் இலக்கு..
 

By 
ban6

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷாண்டோ கேப்டனாக களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்கதேச அணி தரப்பில் ஹசன் - லிட்டன் தாஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் கூட்டணி முதல் விக்கெட்டை வீழ்த்த போராடினர். ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், வங்கதேச அணி வீரர்கள் எந்த சிரமமும் இன்றி ரன்கள் சேர்த்தனர். இதனிடையே 9வது ஓவரை வீசிய போதே ஹர்திக் பாண்டியா வலியால் துடித்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ஹசன் 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஆனால் குல்தீப் யாதவ் வீசிய 15வது ஓவரில் ஹசன் 51 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ஷாண்டோ 8 பந்தில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனிடையே தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தார். இதன்பின்னர் இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடங்கியது. இளம் வீரர் மெஹதி ஹசன் மிராஸ் 3 ரன்களிலும், லிட்டன் தாஸ் 66 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். 44 ரன்களில் 4 விக்கெட்டுகளை வங்கதேசம் அணி இழந்து தவித்தது.

இதன்பின்னர் வந்த ஹிர்தாய் 16 ரன்களிலும், அனுபவ வீரர் ரஹிம் 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்திருந்தது. இருப்பினும் அனுபவ வீரர் மஹ்மதுல்லா களத்தில் இருந்ததால், வங்கதேச ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதற்கேற்ப தாக்கூர் வீசிய 46வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 47வது ஓவரில் 8 ரன்களும், 49வது ஓவரில் 10 ரன்களும் சேர்க்கப்பட்டது.

பின்னர் பும்ரா வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் மஹ்மதுல்லா 46 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Share this story