இந்தியா-அயர்லாந்து மோதல் : 11 மாதங்களுக்கு பிறகு பும்ரா ஆட்டம்.. 

By 
pumra4

ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்று உள்ளது. இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா 11 மாதங்க ளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடுகிறார். முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ( 20 ஓவர்) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளை தவறவிட்டார்.

காயத்துக்காக பும்ரா ஆபரேஷன் செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த ஐபிஎல் சீசனிலும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஆடவில்லை. முழு உடல் தகுதி பெற்றதால் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அயர்லாந்து தொடரில் 2-வது கட்ட இந்திய அணியே விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முன்னனி வீரர்கள் ஆடவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம்துபே, அவேஷ்கான், ஜிதேஷ்சர்மா, ரிங்குசிங், ஷபாஸ் அகமது உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. சமீபத் தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசிடம் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது. இந்திய அணி அயர்லாந்தில் 3-வது முறையாக விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு 2 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

அயர்லாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 5 போட்டி யிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது. அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்திக்காததால் அந்த அணியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்க்கொள்ளும். பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share this story