சேப்பாக்கம் மைதானத்தின் ‘சென்டிமென்ட்டை ’ உடைத்தெறிந்த இந்திய அணி; ரசிகர்கள் உற்சாகம்.. 

By 
chepak

சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்ற மைதானங்களில் இருந்து வேறுபட்டது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால், பகலிரவு ஆட்டங்களில் லேசான பனிப்பொழிவு அல்லது காற்றில் ஈரப்பதம் இருக்கவே செய்யும். இது இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்த மைதானத்தில் 1987-ஆம் ஆண்டு முதல்முறையாக ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. இப்போதுவரை இந்த மைதானத்தில் 23 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், 14 முறை முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. ஆதலால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட் செய்யவே விரும்புவார்கள். இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்தால் குறைந்தபட்சம் 280 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப்பின் சென்னையில் நடந்த ஆட்டங்களில் இந்திய அணி ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. கடைசியாக இங்கு 2023-ஆம் ஆண்டு, மார்ச் 22-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில்கூட இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வீழ்த்தியது என்பதால் இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ‘சென்டிமென்ட்’டாக பார்க்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், கடந்த 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இந்திய அணியை ஒரு ரன்னில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் ஆஸ்திரேலிய அணிக்கே சாதகமாக இருந்ததால், சேப்பாக்கம் மைதானம் என்றாலே இந்திய அணிக்கு ‘சென்டிமென்ட்’டாக சரிவருமா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால், இந்த ‘சென்டிமென்ட்கள்’ அனைத்தையும் ராகுல், விராட் கோலி கூட்டணி உடைத்தெறிந்து விட்டனர். சென்னையில் 1987-ஆம் ஆண்டுக்குப்பின், அதாவது ஏறக்குறைய 36 ஆண்டுகளுப்பின், நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி முதல்முறையாக வீழ்த்தியுள்ளது.

Share this story