சர்வதேச கால்பந்து : முதலிடம் பிடித்து, மெகா சாதனை படைத்தார் ரொனால்டோ.!

By 
International football Ronaldo tops mega record

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 

கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலகக்கோப்பையில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 

32 நாடுகள் :

2022-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.

இதில், 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடும். 

மற்ற 31 நாடுகளும் தகுதிச் சுற்று மூலம் தேர்வுபெறும். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. 

ஐரோப்பாவில் நடைபெற்று வந்த தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில், போர்ச்சுக்கல்- அயர்லாந்து அணிகள் மோதின. 

சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில், போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அவர் 89 மற்றும் 96-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

111 கோல்கள் :

இந்த 2 கோல்கள் மூலம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். 36 வயதான அவர் 180 ஆட்டங்களில் விளையாடி 111 கோல்கள் அடித்துள்ளார்.

ஈரானை சேர்ந்த அலிடாய் 149 ஆட்டங்களில் விளையாடி, 109 கோல்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அவரை ஏற்கனவே சமன் செய்த ரொனால்டோ, தற்போது அவரை முந்தி அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்தார். 

ரொனால்டோ சமீபத்தில்தான், யுவென்டஸ் கிளப்பிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மீண்டும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை சேர்ந்த முக்தர் தகாரி 89 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும், புஸ்காஸ் (ஹங்கேரி) 84 கோல்கள் அடித்து 4-வது இடத்திலும், காட்பிரே (ஜாம்பியா) 79 கோல் அடித்து 5-வது இடத்திலும் உள்ளனர்.

Share this story