ஐபிஎல் கெத்து : பாண்ட்யாவுக்கு, சஞ்சு சாம்சன் பேட்டால் பதிலடி
 

By 
sanju3

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 177 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சந்திப் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் நங்கூரம் போல நின்று சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்.

அந்த சமயத்தில் தேவையின்றி அவரது அருகே வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்லெட்ஜிங் செய்து வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் வம்பிழுத்தார். குறிப்பாக கடந்த வருடம் இதே மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் தோற்கடித்த மமதையில் சில வார்த்தைகளை உபயோகித்து பாண்டியா பேசியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

ஆனால் அதற்காக பதறாமல் கவனத்தை சிதற விடாமல் பொறுமையாக இருந்த சஞ்சு சாம்சன், உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருபவர் ரஷித் கான். அவர் வீசிய 13-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்க விட்டு பதிலடி கொடுத்தார்.

சொல்லப்போனால் மாயாஜால ஸ்பின்னராக கருதப்படும் ரஷித் கானுக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மட்டுமே ரஷித் கானை ஹாட்ரிக் சிக்சர்களை தாண்டி தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார்.

இந்த போட்டியில் அவருக்கு நிகராக சிக்சர்களை தெறிக்க விட்ட சஞ்சு சாம்சன் வம்பிழுத்த பாண்டியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (32) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். 
 

Share this story