ஐபிஎல் டென்ஷன் : இன்றும் மழை பெய்தால், சென்னை-குஜராத் அணிகளுக்கு தீர்வு என்ன தெரியுமா?

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது.
இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும். 9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும்.
10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும். நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும். அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும். சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும்.
அந்த அணி 'லீக்' முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன. மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார். போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்வதே நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.