உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், மேக்ஸ்வெல் மெகா சாதனை..
 

By 
max2

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிவேக சதம் அடித்த உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கி இருக்கிறார். வெறும் 40 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார் மேக்ஸ்வெல். அதுவும் 250 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் அடித்த சதம் அனைவரையும் மிரள வைத்தது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தான் இந்த உலக சாதனையை சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் மேக்ஸ்வெல்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமானது என்பதால் ஆஸ்திரேலியா துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தது. டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

லாபுஷேன் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். கடைசி 10 ஓவர்களை நெருங்கிய போது அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். அவர் வந்தது முதலே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடினார். 48 மற்றும் 49வது ஓவர்களில் மட்டும் பவுண்டரிகளை அடித்து 49 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்.

அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான். சில நாட்கள் முன்பு தென்னாப்பிரிக்கா அணியின் எய்டன் மார்கிரம் 49 பந்துகளில் சதம் அடித்த நிலையில், அதை முறியடித்து 40 பந்துகளில் சதம் அடித்தார் மேக்ஸ்வெல். அவர் சதம் அடித்த போது ஸ்ட்ரைக் ரேட் 250இல் இருந்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார் மேக்ஸ்வெல். பின்னர் அவர் கடைசி ஓவரில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 131 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது.

Share this story