ஜடேஜாவிற்கு சிறந்த பீல்டருக்கான பதக்கம்..

By 
jja

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்தனர்.

ஒரு நாள் போட்டியில் தன்ஷித் அகமது தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 8 ரன்னிலும், மெஹிடி ஹசன் மிராஸ் 3 ரன்னிலும் லிட்டன் தாஸ் 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தவ்ஹீத் ஹிரிடோய் 16 ரன்களில் வெளியேறவே, அடுத்து முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார்.

அவர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். போட்டியின் 42.3 ஆவது ஓவரில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் முஷ்பிகுர் ரஹீம் அடித்த பந்தை ஆஃப் சைடு திசையில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அதோடு, மைதானத்திற்கு வெளியில் நின்றிருந்த பீல்டிங் பயிற்சியாளரிடம் தனக்கு மெடல் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு பீல்டிங் பயிற்சியாளர் கை தட்டி பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் தான், இந்தப் போட்டியில் இந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் டிரெஸிங் ரூமில் பதக்கம் வழங்குவது குறித்து பேசினர்.

இதில், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மைதானத்தில் சிறந்து விளங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு பாராட்டு தெரிவித்தார். இது வெறும் பதக்கம் மட்டுமின்றி, உடல் தகுதி, திறமைக்கு கிடைத்த பரிசு என்று பேசி பதக்கத்தை ராகுலிடம் வழங்கினார். அதனை பெற்று ஜடேஜாவிற்கு வழங்கினார் கேஎல் ராகுல். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது.

Share this story