முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..
 

By 
Mohammad Amir-Harbhajan Singh cross-border clash on Twitter ..

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. 

உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 

இதை மையமாக வைத்து, இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இடையே ‘டுவிட்டர்’ மூலம் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

முதலில், இந்தியாவின் தோல்வியை கிண்டலடித்து, டுவிட் செய்த முகமது அமிர், தோற்றதால் ஹர்பஜன்சிங் தனது டெலிவிஷனை உடைக்கவில்லையா? என்று கேட்டு வம்புக்கு இழுத்தார். 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹர்பஜன்சிங் 2010-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டத்தில் அதில் வெற்றிக்குரிய சிக்சரை அமிரின் பந்து வீச்சில் தான் அடித்த வீடியோவை பதிவிட்டார். 

உடனே அமிர், ‘2006-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில், ஹர்பஜன்சிங்கின் ஓவரில் அப்ரிடி தொடர்ச்சியாக 4 சிக்சர் விளாசிய வீடியோவை போட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இது எப்படி நடக்கும் என்று சீண்டினார். 

இதனால், கோபமடைந்த ஹர்பஜன்சிங், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் முகமது அமிர் பணத்தை பெற்றுக்கொண்டு வேண்டுமேன்றே ‘நோ-பால்’ வீசி ‘மேட்ச் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தை கையில் எடுத்தார். 

‘நோ-பால்’ வீசும் புகைப்படத்தை பதிவிட்ட ஹர்பஜன்சிங், ‘இதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள். உங்களது ஒரே நோக்கம் பணம் மட்டுமே. 

உங்களது நாட்டு மக்களை ஏமாற்றி, இந்த விளையாட்டுக்கும் அவமதிப்பு செய்தீர்கள். இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று சாடினார். 

ஆனால், அமிரும் விடுவதாக இல்லை. ‘எனது கடந்த கால நிகழ்வுகளை பற்றி சொல்லி, இப்போது நாங்கள் பெற்ற வெற்றியை மறைத்து விட முடியாது’ என்றார். 

டுவிட்டர் மூலம் எல்லைதாண்டிய இவர்களது வார்த்தை மோதல், ரசிகர்களை உன்னிப்பாக கவனிக்க வைத்தது.
*

Share this story