எனது அடுத்த இலக்கு : நீரஜ் சோப்ரா வாய்ஸ்
 

By 
My next target Neeraj Chopra Voice

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, டெல்லியில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. 

அடுத்த இலக்கு :

பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பில் நீரஜ் சோப்ரா பேசியதாவது :

நான் ஏற்கனவே ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டியில் தங்கம் கைப்பற்றி இருக்கிறேன். இப்போது ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வென்று விட்டேன். 

எனவே, எனது அடுத்த இலக்கு 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது தான். உலக சாம்பியன்ஷிப் மிகப்பெரிய தொடர். சில சமயங்களில் ஒலிம்பிக்கை விட கடினமாக இருக்கும். 

இந்த ஒலிம்பிக் பதக்கத்துடன் நான் மனநிறைவு அடைந்து விடப்போவதில்லை. இதைவிட இன்னும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூட வேண்டும்.

ஆரம்பத்தில் நான் பஞ்ச்குலாவில் (அரியானா) பயிற்சி எடுத்து வந்தேன். அங்கு நல்லமுறையில் பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அங்கு போதிய வசதி வாய்ப்புகள் இல்லை. 

உணவு வசதியும் நன்றாக இல்லை. 2015-ம் ஆண்டில் நான் பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள தேசிய பயிற்சி முகாமில் இணைந்ததும் எனக்கு எல்லாமே மாறி விட்டது. 

தேசிய பயிற்சி முகாமுக்கு சென்ற பிறகு தான் சிறப்பான பயிற்சிகள், தரமான விளையாட்டு உபகரணங்கள், சத்தான உணவுகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றேன். 

அதன்பிறகு, எனது விளையாட்டு வாழ்க்கையே மாறி விட்டது. அதற்காக இந்திய தடகள சம்மேளனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘எனது சாதனையால் ஊக்கமடைந்து இளம் வீரர்கள் பலரும் தடகளத்தை, குறிப்பாக ஈட்டி எறிதல் விளையாட்டை தேர்ந்தெடுத்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். 

அதற்குரிய வசதி வாய்ப்புகள் சரியாக கிடைத்தால், நிச்சயம் அதிக இளைஞர்கள் இந்த போட்டிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.

தேசிய ஈட்டி எறிதல் தினம் :

இந்திய தடகள சம்மேளனத்தின் திட்ட கமிட்டி சேர்மன் லலித் பனோட் கூறியதாவது :

 ‘இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7-ந்தேதியை அடுத்த ஆண்டு முதல் தேசிய ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட உள்ளோம். 

அந்த நாளில், எங்களது சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு மாநில தடகள சங்கங்களையும் ஈட்டி எறிதல் போட்டியை நடத்த அறிவுறுத்துவோம். 

அதன்பிறகு, மாவட்டங்களுக்கு இடையே போட்டிகளை நடத்துவோம். நிறைய ஈட்டிகள் தேவைப்படுவதாக அறிகிறோம். 

அவற்றை வழங்குவோம். வருகிற ஆண்டுகளில் ஈட்டி எறிதல் போட்டியை தேசிய அளவில் விரிவாக்கம் செய்வோம்’ என்றார்.

Share this story