விராட்கோலியோ, சச்சினோ அல்ல, அது எப்போதும் எம்.எஸ். டோனி தான்: கவுதம் கம்பீர் பேட்டி 

By 
caca

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணி குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக 2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் தற்போதைய இந்திய அணியே சிறந்த அணி என்று விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியை பற்றி மீண்டும் பேச்சுகள் எழுந்தது. 

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் கம்பீர். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்களை விளாசி அசத்திய கம்பீர், 28 ஆண்டுகளாக காத்திருந்த இந்திய ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார்.

இருப்பினும் உலகக்கோப்பை தொடர் குறித்த விவாதம் தொடர்பாக பேசும் போதெல்லாம் தோனி மீது கவுதம் கம்பீர் எப்போதும் வன்மத்தை வெளிப்படுத்தியே வந்துள்ளார். ஆனால், அண்மை காலமாக டோனி மீதான கம்பீரின் பார்வை மாறியுள்ளது.

ஏற்கனவே கேப்டன்சி பொறுப்பை மட்டும் தோனி வகிக்கவில்லை என்றால், ஏராளமான சாதனைகளை டோனி பேட்டிங்கில் முறியடித்திருப்பார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வி குறித்த விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசியபோது,

அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் யார் என்று கேட்டால், அது எம்எஸ் டோனி. அவருடன் எப்போதும் இணைந்து பேட்டிங் செய்வதை விரும்பியிருக்கிறேன்.

குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இருவரும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார். இது டோனி ரசிகர்கள் மட்டுமல்லாமல், கவுதம் கம்பீர் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Share this story