டோனி – ஜடேஜா சாதனையை முறியடித்து, புதிய வரலாற்று சாதனை படைத்த நெதர்லாந்து பிளேயர்ஸ்..

நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 19ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடவுட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் கசுன் ரஜிதா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து கொலின் அக்கர்மேன் களமிறங்கி நிதானமாக விளையாடினார். ஆனால், அதற்குள்ளாக மேக்ஸ் ஓடவுட் 16 ரன்களில் ரஜிதா பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு பாஸ் டி லீட் களமிறங்கினார். அதற்குள்ளாக கொலின் அக்கர்மேன் 29 ரன்களில் ரஜிதா பந்தில் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து லீட் 6 ரன்களில் வெளியேற அடுத்து வந்த தேஜா நிடமானுரு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து 21.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக நெதர்லாந்து 150 ரன்கள் குவிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அப்போதுதான், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் இருவரும் களமிறங்கி நிதானமாக பொறுமையாக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்து, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய பார்ட்னர்ஷிப் சாதனையை உருவாக்கியுள்ளனர்.