நண்பர்கள் அனைவருக்கும் பணிவான எங்களது கோரிக்கை : விராட்கோலி அன்ட் அனுஷ்கா

By 
rma

சென்னை: உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் பெறுவதற்காக நண்பர்கள் யாரும் என்னிடம் உதவி கேட்க வேண்டாம் என்று இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. நாளை முதல் நவ.19ஆம் தேதி வரை உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு மற்றும் விற்பனை கடந்த மாதமே தொடங்கியது. புக் மை ஷோ செயலி மூலமாக பிசிசிஐ டிக்கெட் விற்பனையை தொடங்கியது. ஆனால் டிக்கெட்டுகளை பெற முடியவில்லை என்று ரசிகர்களிடையே புகார்கள் எழுந்தன. இதனால் டிக்கெட்டுக்கான தேவை அதிகரித்தது.

இதனால் கள்ளச்சந்தையில் ரசிகர்கள் பலரும் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏராளமான டிக்கெட்டுகளை பெற்று வந்தனர். இதனால் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனிடையே நேரடி கவுன்ட்டர் டிக்கெட் விற்பனையும் பல்வேறு மைதானங்களிலும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனால் என் நண்பர்கள் அனைவரும் டிக்கெட்டுகளை கேட்க வேண்டாம் என்று பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன். அனைவரும் வீட்டில் இருந்தே போட்டிகளை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்தப் பதிவை குறிப்பிட்ட அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, விராட் கோலியின் பதிவில் இன்னும் சிலவற்றை இணைக்க விரும்புகிறேன். ஒருவேளை விராட் கோலியிடம் இருந்து பதில் வரவில்லை என்றாலும், என்னிடமும் உதவி கேட்காதீர்கள். புரிதலுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரின் பதிவும் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Share this story