அற்புதமான வெற்றி: இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே அணி தங்கம் பதக்கத்தை வென்றுள்ளது.
அதே போல் ஆடவர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் ஜோடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்நிலையில் தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே ஜோடி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு மதிப்புமிக்க தங்கத்தை மீண்டும் கொண்டு வந்தனர். அவர்கள் குறிப்பிடத்தக்க குழு உணர்வையும் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
சவுரவ் கோஷல், அபய் சிங் ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அற்புதமான வெற்றியைப் பெற்று, தங்கப் பதக்கத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தது. இந்த முயற்சி பல இளம் விளையாட்டு வீரர்களை விளையாட்டைத் தொடரவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.