மகளிர் கிரிக்கெட்டிலும் தோல்விக்குப் பின் தோள் கொடுத்த பிரதமர் மோடி..

By 
wcwc

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியதை அடுத்து பிரதமர் மோடி இந்திய வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இவ்வாறு இந்திய வீரர்கள் தோல்வி அடைந்த தருணத்தில் அவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருப்பது முதல் முறை அல்ல.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் ஆட்டத்தில் மதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை நோக்கி சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.

தோல்வியால் மனம் உடைந்த இந்திய வீரர்கள் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர். இந்தப் போட்டியைக் காண பிரதமர் மோடியும் சென்றிருந்தார். போட்டி முடிந்த பின் இந்திய வீரர்களை அவர்களது அறைக்குச் சென்று சந்தித பிரதமர் மோடி, அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறினார்.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ் என ஒவ்வொரு வீரரைரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி தொடர்ந்து பத்து வெற்றிகளைப் பெற்றதைக் குறிப்பிட்டு இந்திய வீரர்களின் செயல்பாட்டில் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.

பிரதமர் மோடி இதற்கு முன்பும் தோல்வியில் துவண்ட இந்திய அணிக்கு ஆறுதல் அளித்துள்ளார். 2017ஆம் ஆண்டில் மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து கோப்பையைத் தவறவிட்டபோதும், பிரதமர் மோடி இந்திய வீராங்கனைகளை நேரில் சந்தித்தார். அதைப்பற்றி அவரே தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

"சமீபத்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எனது மகள்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த வாரம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவர்களுடன் பேசியதை மிகவும் ரசித்தேன். ஆனால் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது அவர்களுக்கு பெரிய சுமையாக இருந்தது. அவர்கள் முகத்தில் அழுத்தமும் பதற்றமும் தெரிந்தது" என்று வானொலி உரையில் பிரதமர் மோடி கூறினார்.

"பாருங்க, இது ஊடகங்களின் யுகம். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விடுகின்றன. வெற்றி அடையாதபோது அது கோபமாக மாறிவிடுகிறது. இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தால் நாட்டின் கோபம் அந்த வீரர்கள் மீது விழும். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம்" என்று வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறியதையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

Share this story