நீரஜ் சோப்ராவிற்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

By 
chopra33

ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் "நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில் ''உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this story