ரூ. 37 கோடி பரிசு யாருக்கு? : உலக பெண்கள் டென்னிஸ் இன்று தொடக்கம்..

Rs. 37 crore prize for whom  World women's tennis starts today ..


‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச் சுற்று என்று அழைக்கப்படும், உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

ரூ. 37 கோடி பரிசு :

மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில், இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகி விட்டார். 

அவர், ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இந்த முடிவை மேற்கொண்டார். 

இதேபோல், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிர் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு வசதியாக ஒதுங்கினார். 

அவர்களுக்கு பதிலாக, தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

அரைஇறுதிக்கு தகுதி :

இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இதில், ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

தொடக்க நாளில் நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் மோதுகிறார்கள்.

பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. இதில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கிறது.
*

Share this story