பிரதமர் மோடியுடன், சானியா மிர்சா, பி.வி.சிந்து, தீபிகா குமாரி, சரத்கமல் பேச்சு

By 
Sania Mirza, PV Sindhu, Deepika Kumari, Sarathkamal talk to Prime Minister Modi

32-வது ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. 

இதையொட்டி பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொலி மூலம் நடந்தது.

கலந்துகொண்டவர்கள் :

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில், தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி, வில்வித்தை மங்கை தீபிகாகுமாரி, டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோரும், சிலரின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி, வீரர்- வீராங்கனைகள் ஒவ்வொருவருடனும் உரையாடி, அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் சாதனைகளை நினைவுகூர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படவும் வாழ்த்து தெரிவித்தார்.

அர்ப்பணிப்பு :

இந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசுகையில், ‘எதிர்பார்ப்புகளில் சிக்கித் திணற வேண்டாம். போட்டியில் உங்களுடைய சிறந்த திறனை மட்டும் வெளிப்படுத்துங்கள். உங்களை நேரில் சந்தித்து இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்து இருப்பேன். அதற்காக எப்போதும் எதிர்நோக்கி இருக்கிறேன். 

போட்டி முடிந்து திரும்பிய பிறகு, உங்களுடன் நேரத்தை செலவிட நான் தயாராக இருக்கிறேன். நாடே உங்களுக்கு உற்சாகம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணர்வுகளும் உங்களுடன் இணைந்து இருக்கிறது. தைரியம், நம்பிக்கை, நேர்மறை எண்ணம், கட்டுக்கோப்பு, அர்ப்பணிப்புடனும் செயல்படுங்கள். நாட்டுக்காக எல்லாவற்றையும் அளிக்கும் வீரர்களுக்கு நாடு எல்லா வகையிலும் பக்கபலமாக நிற்கும்’ என்று தெரிவித்தார்.

ஐஸ்கிரீம் :

இந்த சந்திப்பில் நகைச்சுவையாகவும் மோடி பேசினார். 
‘2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின்போது, உங்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட தடை விதிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு மற்றொரு தடை ஏதாவது உண்டா?’ என சிந்துவை பார்த்து மோடி கேட்டார். அதற்கு சிந்து, ‘ உணவுமுறை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்’ என்று பதில் அளித்தார்.

தீபிகா :

‘வில்வித்தையில் நீங்கள் தான் இப்போது நம்பர் ஒன், உங்களது பயணம் சிறப்பு வாய்ந்தது’ என்று வில்வித்தை வீராங்கனை தீபிகாவை பாராட்டினார்.

எனது ஹீரோ :

மோடியின் ஒரு கேள்விக்கு மேரிகோம் பதில் அளிக்கையில், ‘குத்துச்சண்டையில் முகமது அலி தான் எனது ஹீரோ. அவரது ஆட்டத்தைப் பார்த்து தான் குத்துச்சண்டை விளையாட்டை தேர்வு செய்தேன்’ என்றார்.

228 வீரர்கள் :

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொள்கிறது. 

இதில், 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான். 

இந்திய அணியின் முதல் குழு வருகிற 17-ந் தேதி டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறது. அந்த குழுவில் வீரர்கள், அதிகாரிகள் என மொத்தம் 90 பேர் இடம் பெறுவார்கள்’ என்றார்.

பி.வி.சிந்து :

பின்னர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறுகையில், 
‘பிரதமர் மோடியுடன் பேசியது மிகப்பெரிய கவுரவம். அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒட்டுமொத்த தேசமும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கிறது. ஒலிம்பிக்கில் உங்களை (மக்கள்) நாங்கள் பெருமைப்படுத்துவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

Share this story