டி20 உலகக்கோப்பை.. நாக் அவுட்டில் அரைசதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா..

By 
rhrhh

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி  கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் கோலி 9 ரன்களுக்கு ரீஸ் டாப்லி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் கேப்டன் ரோகித் சர்மா உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியானது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 36ஆவது பந்தில் 50 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். கடைசியில் அவர் 57 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ்வும் 47 ரன்களில் நடையை கட்டினார்.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் 50 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 63 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்த நிலையில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே கோல்டன் டக்கில் வெளியேற, கடைசியில் வந்த அக்‌ஷர் படேல் 10 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

Share this story