டி20 உலகக்கோப்பைப் போட்டி: ஷிவம் துபேவுக்குப் பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..

By 
yaj

மே.இ.தீவுகளிலில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் இன்று வங்கதேச அணியை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலிருந்தாவது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பும்ரா, அர்ஸ்தீப் சிங், குல்தீப், ஜடேஜா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா என்று பந்து வீச்சு பலமாக இருக்கும் போது ஷிவம் துபே பவுலிங் வீசுவார் என்று அவரை அணியில் கூடுதல் சாதகம் என்று வைத்திருப்பதாகக் கூறுவது சுத்தப் பம்மாத்தாகும். ஷிவம் துபேவுக்கு இருக்கும் , ‘லாபி’ யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இல்லை என்பது தெள்ளத் தெளிவு

ஆனால் லாபிதான் ஜெய்ஸ்வாலுக்கு இல்லை, ரசிகர்களின், கிரிக்கெட் வல்லுநர்களின் ஆதரவு ஜெய்ஸ்வாலுக்குத்தான் என்பதில் ஐயமில்லை. நியாயமாகப் பார்த்தால் ரோஹித், கோலி இருவருமே ஆடக்கூடாது. ஆனால் கேப்டன் ரோஹித்தை ட்ராப் செய்ய முடியாது எனில் கோலியை உட்கார வைத்து விட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வைத்துக் கொண்டு ஷிவம் துபேயையும் தக்க வைக்கலாம்.

ஆனால், முதுகெலும்பற்ற பயிற்சியாளராக ராகுல் திராவிட் அத்தகைய முடிவுகளை எடுக்கும் திடமனது கொண்டவரல்ல என்பது ராகுல் திராவிட்டை அறிந்தவர்கள் கூறும் கருத்தாக உள்ளது. 3ம் நிலையிலிருந்து 7ம் நிலை வரை 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு 32 பேர்களை ராகுல்-ரோஹித் கூட்டணி சோதனை செய்து பார்த்ததில் ஓரிருவர் கூடவா தேறவில்லை? இப்படி அவர்கள் கூறினால் அவர்களின் சோதனை முயற்சிகள் தோல்வி என்றுதானே அர்த்தம்?

அப்படி அவை சோதனை முயற்சிகள் அல்ல, உண்மையிலேயே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தோம் என்று கூறினார்களேயானால், ஏன் அதில் 2-3 வீரர்களைக் கூடவா இன்னும் தக்க வைக்க முடியவில்லை? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. காரணம் ரோஹித் சர்மா திடீரென நான் ஒரு தொடருக்கு வரவில்லை என்பார், அவருக்குப் பதில் யாரையாவது பதிலீடு செய்ய வேண்டியிருக்கும், கோலி எந்தத் தொடரை ஆடுவது என்று அவரே முடிவு செய்வார், தன்னைத்தானே தேர்வு செய்து கொள்வார்.

அப்படி அவர் லீவில் செல்லும் போது இன்னும் ஒரு சில வீரர்களை அவரது இடத்தில் முயற்சி செய்து வீணடிக்கப்பட்டனர். காரணம், இவர்கள் இருவரும் அணிக்கு மீண்டும் வந்து விட்டால் அந்த இடம் சுலபமாக அவர்களுக்கு மீட்டெடுக்கும் படியாக இருக்க வேண்டும் என்ற தகிடுதத்த சோதனை முயற்சிகளாக அவை இருந்ததே காரணம்.

கேப்டன்சியிலும் அப்படித்தான் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் நன்றாகவே கேப்டன்சி செய்தனர், அவர்கள் இருவர் தலைமையிலும் இந்திய டி20 அணி நன்றாகவே இருந்தது. திடீரென எங்கிருந்து ரோஹித் கொண்டு வரப்பட்டார்? காரணம் என்னவென்பதெல்லாம் பிசிசிஐ ஆட்சியதிகாரப் புதிர் நடைமுறைகளுக்குரியது.

இப்படியாக சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு இடம் கொடுக்காமல் முக்கியத் தொடர்களில் ஆக்கிரமிப்பு செய்வதும், மற்ற தொடர்களை அவர்கள் கைவிடும்போது இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுத்து விட்டு பிறகு நீக்கிவிட்டு ஆசை காட்டி மோசம் செய்வதும் அணியின் வளர்ச்சிக்கு உதவாது.

இந்த டி20 உலகக்கோப்பையை நாம் பவுலிங்கில்தான் இதுவரை வென்றுள்ளோம். பேட்டிங்கில் ஒரு நல்ல சக்திவாய்ந்த தொடக்கம் வேண்டுமெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஓப்பனிங் இறங்கி, கோலியை மீண்டும் 3ம் நிலையில் இறக்க வேண்டும்.

ஏனெனில் அவர் ஓப்பனிங்கில் இதுவரை ஒன்றும் ஆடிவிடவில்லை, ஒரே சொதப்பல்தான். எனவே அவருக்கு வரும் அந்த கடைசி வரை நின்று ஆடும் ரோலை கோலியிடமே ஒப்படைக்கட்டும். ஷிவம் துபே சர்வதேசப் போட்டிகளுக்கான வீரராக இன்னும் தயாராகவில்லை. ஐபிஎல் போன்ற தரமற்ற போட்டிகளை வைத்து கோலியையே நாம் எடைபோட முடியாத போது ஷிவம் துபேயை எப்படி எடை போட முடியும்? ஆகவே, இன்று வங்கதேசப் போட்டிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலைக் கொண்டுவருவது மிகச்சிறந்த தருணம். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் இதைத்தான் கூறுகிறார்.

Share this story