பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

By 
Tennis player's magic of sexual harassment Women's organization Action Notice

உலக டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமானவர் சீனாவின் 35 வயது பெங் சூவாய்.

பாலியல் குற்றச்சாட்டு :

இவர், கடந்த மாதம் தொடக்கத்தில் சீன நாட்டின் முன்னாள் துணை அதிபரான ஜாங் காவ்லி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன் பிறகு, பெங் சூவாய் மாயமானார். அவரை வெளிஉலகத்தினர் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. 

இதையடுத்து, உலக டென்னிஸ் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் முன்னாள், இன்னாள் வீரர்கள் பலரும் பெங் சூவாய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

பெண்கள் அமைப்பு :

இந்த விவகாரத்தில், சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்ததால், சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் பாதுகாப்பாக இருப்பதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. 

அவர் டென்னிஸ் விழாவில் பங்கேற்றதாக ஒரு வீடியோவும் வெளியானது. ஆனாலும், சீனாவின் பதிலில் உலக பெண்கள் டென்னிஸ் அமைப்பு திருப்தி அடையவில்லை.

இந்நிலையில், ஹாங்காங் உள்பட சீனாவில் அடுத்து நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டிகளுக்கும் தற்காலிக தடை விதிப்பதாக, பெண்கள் டென்னிஸ் சங்கம் அதிரடியாக அறிவித்தது. 

இது குறித்து, பெண்கள் டென்னிஸ் சங்க தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறுகையில், ‘பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெங் சூவாய் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறாரா? என்பதை அவருடன் நாங்கள் பேசி உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் விடுத்த வேண்டுகோள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

அத்துடன் அவர் கூறிய புகார் குறித்து, வெளிப்படையான முறையில் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எங்களது நிலைப்பாடாகும். 

எங்களது கோரிக்கையை சீன அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், இந்த தடை தளர்த்தப்படலாம். இல்லாவிட்டால், சீனாவில் நடக்க இருக்கும் போட்டிகள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும். போட்டிகளை நாங்கள் இன்னும் ரத்து செய்யவில்லை. ஆனாலும் அதற்கு தயாராகவே இருக்கிறோம். 

தற்போதைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு சீனாவில் போட்டியை நடத்தினால் எங்கள் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபாயங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்’ என்றார்.
*

Share this story