விபரீத ஆசையால் வந்த வினை; பிரபல கிரிக்கெட் வீரர் மூக்கு படுகாயம்.. 

By 
nose

2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை அக்டோபர் 8 அன்று சந்திக்க உள்ளது.

இந்த முக்கியமான போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் இரு அணிகளும் தங்கள் ஸ்பின்னர்களை தயார் செய்வதில் முனைப்பாக உள்ளன.

ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னர் ஆடம் ஜம்பா தான். அவர் இந்தப் போட்டியில் முக்கிய வீரராக இருக்கும் நிலையில், சென்னையில் ஆஸ்திரேலிய அணி தங்கி இருக்கும் ஹோட்டல் நீச்சல் குளத்தில் சாகசம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறார்.

அப்போது விளையாட்டாக நீச்சலின் போது நீருக்குள் முங்கி, தான் கண்ணை மூடிக் கொண்டே நீச்சல் அடிக்கப் போகிறேன் எனக் கூறி நீச்சல் அடித்துள்ளார் ஜம்பா. தான் நேராக செல்வதாக நினைத்து வேகமாக அவர் நீந்த, எதிரே இருந்த நீச்சல் குளத்தின் படிக்கட்டில் அவரது மூக்கு மோதி இருக்கிறது.

காயத்துடன் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறார். அவர் முகம் பார்க்க மோசமாக இருக்கிறதே தவிர அவரால் போட்டிகளில் ஆட முடியும் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. முகத்தில் இருக்கும் காயத்தின் வடுக்கள் ஆற இரண்டு வாரம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.

உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் போது இது போன்ற தேவையே இல்லாத சேட்டைகளில் வீரர்கள் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியின் போது ரக்பி ஆடுகிறோம் என ஆபத்தான விளையாட்டான ரக்பி ஆடி ரசிகர்களை பயமுறுத்தினார்கள்.

வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பயிற்சியில் கால்பந்து ஆடி லேசான காயத்துடன் தப்பினார். அடுத்து ஆடம் ஜம்பா நீச்சல் குளத்தில் சாகசம் செய்கிறேன் என மூக்கில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

Share this story