ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்ட மைதானம்.. போட்டிகளுக்கு பிறகு அழிக்கப்படும் சம்பவம்..

By 
250c

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டது. மேலும், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் டல்லாஸ் மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 3ஆவதாக நியூயார்க்கில் புதிதாக ஒரு மைதானம் உருவாக்கப்பட்டது. ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடியது.

இந்த மைதானத்தில் மொத்தமாக 8 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியா 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 107 ரன்கள் மட்டுமே. 2ஆவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 105. டி20 போட்டிகளுக்கு இது மிகவும் குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் இந்தியா மட்டும் தோல்வியை தழுவியிருந்தால் இந்த மைதானம் குறித்து சர்ச்சை ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை இந்தியா 3 போட்டியிலும் வெற்றி வாகை சூடியது. அதற்கு இந்திய அணியின் பவுலிங்கும் ஒரு காரணமாக இருந்தது. கடைசியாக இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியைத் தொடர்ந்து இந்த மைதானம் அகற்றப்பட உள்ளது. நியூயார்க்கின் நாசா கவுண்டி பகுதியில் அமைக்கப்பட்ட மைதானமானது, ஐசன் ஓவர் பூங்காவிற்கு சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கோல்ஃப் விளையாட்டுக்கான மைதானமாக இருந்தது.

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்காக தற்காலிகமாக இந்த மைதானம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நியூயார்க்கில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் முடிந்த நிலையில், மைதானத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் மைதானம் அகற்றப்பட்டு, இருக்கைகளும் அகற்றப்பட உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக உருவாக்கப்பட்ட இந்த மைதானம் அவசர அவசரமாக அழிக்கப்படும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story