உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்த 3 பேர்தான் கேம் சேஞ்சர் : யுவராஜ் அதிரடி

2023 உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் யார் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடுவார்கள்? யார் அணியின் முக்கிய வீரர்களாக இருந்து போட்டிகளை வென்று கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
அது குறித்து பேசிய முன்னாள் வீரரும், உலகக்கோப்பை நாயகனும் ஆன யுவராஜ் சிங், எந்த வீரரையும் குறிப்பிடாமல் வேறு மூன்று வீரர்களை கேம் சேஞ்சர் என கூறி அசர வைத்து இருக்கிறார். அதில் ஜடேஜாவை ஒரு வீரராக தேர்வு செய்தது தான் ஆச்சரியம்.
வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி தன் சொந்த மண்ணில் ஆடுவதால் உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களும், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்களும் உள்ளனர்.
மிடில் ஆர்டரில் தற்போது தங்கள் ஃபார்மை நிரூபித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோர் உள்ளனர். ஆனால், இவர்களை தாண்டி மூன்று வீரர்களை ஆட்டத்தை மாற்றும் கேம் சேஞ்சர்-ஆக தேர்வு செய்துள்ளார் யுவராஜ் சிங். அந்த மூன்று பேர் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவிந்திர ஜடேஜா. யுவராஜ் சிங் இந்திய அணியில் போட்டிகளை மாற்றும் திறன் கொண்டவர்களாக மூன்று பந்துவீச்சாளர்களையே தேர்வு செய்துள்ளார் என்பது தான் ஆச்சரியம்.
ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கலாம். உண்மையில், பும்ரா மற்றும் முகமது சிராஜ் தற்போது சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். எதிரணிகளை அச்சுறுத்தும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. அவர்கள் முதல் சில ஓவர்களிலேயே போட்டியை மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால், ஜடேஜா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
2023ஆம் ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக ஆடினார். இந்திய அணிக்காக ஆடிய சர்வதேச போட்டிகளில் அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லை. பந்துவீச்சும் சரியில்லை. பேட்டிங்கும் சரியில்லை.