டிஎன்பிஎல் கிரிக்கெட் : நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் அணியுடன் இன்று மோதல்..
 

By 
tnpl44

டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை அணி 2- வது வெற்றியை பெற்றது. திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.

இதனால் கோவை கிங்சுக்கு 127 ரன் இலக்காக இருந்தது. ஹரீஷ் குமார் அதிகபட்சமாக 20 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), சசி தேவ் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். யுதீஷ்வரன் 3 விக்கெட்டும், சித்தார்த் , ஷாரூக்கான், எம்.முகமது, சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கோவை கிங்ஸ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாய்சுதர்ஷன் தொடர்ந்து 3- வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), சுரேஷ்குமார் 34 பந்தில் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர். கோவை அணி 2-வது வெற்றியை பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது. டி.என்.பி.எல். போட்டியின் 10-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் கோவை கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. கோவை அணியுடன் 70 ரன்னிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது.
 

Share this story