இன்றிரவு வேர்ல்ட் கப் சரவெடி : இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்..ஆடுகள விவரம்..

Tonight's World Cup series India-Afghanistan clash.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்றிரவு ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 

இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. 

அரைஇறுதிக்கு தகுதி் :

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப்-2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது லீக்கில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 110 ரன்னில் அடங்கியது.

அடுத்தடுத்து இரு தோல்விகளினால் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகிவிட்டது. மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா தனது 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று (புதன்கிழமை) அபுதாபியில் சந்திக்கிறது. இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும் அரைஇறுதி வாய்ப்பு முழுமையாக கலைந்து விடும்.

இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். முதலில் எஞ்சிய 3 லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா) அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோடு ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டும். 

அடுத்து நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்காட்லாந்து ஆகிய அணிகளில் ஒன்றிடம் தோற்க வேண்டும். 

இவ்வாறு நிகழ்ந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணிக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ரோகித்-ராகுல் :

இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங், படு சொதப்பலாக இருக்கிறது. 

இரு ஆட்டங்களிலும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜொலிக்கவில்லை. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எந்தவித ஆக்ரோஷமும் இன்றி பெட்டி பாம்பாய் சரண் அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. 

இன்றைய ஆட்டத்திலாவது, இவர்கள் ரன்மழை பொழிவார்களா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். 

இந்திய அணி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டுவது மிகவும் அவசியமாகும்.

நிர்வாகம் பரிசீலனை :

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆனால், தொடர்ந்து அவரை ஓரங்கட்டும் கேப்டன் கோலி இந்த தடவையும் வாய்ப்பு வழங்குவது சந்தேகம் தான். 

இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் குறைந்து காணப்படுவதால், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹரை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம். ஆப்கானிஸ்தானையும் துளியும் குறைத்து மதிப்பிட முடியாது. 

மிரட்டல் :

ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட வெற்றியின் விளிம்பில் வந்து தான் தோற்றது. 

அதாவது கடைசி இரு ஓவர்களில், பாகிஸ்தானின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டபோது, 19-வது ஓவரில் ஆசிப் அலி 4 சிக்சர்கள் விளாசி விட்டார். மற்றபடி, ஆப்கானிஸ்தானின் சுழல் ஜாலம் மிரட்டியது. 

ரஷித்கான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும், நவீன் உல்-ஹக், ஹமித் ஹசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர். 

காயத்தால் அவதிப்படும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் திரும்பினால், பந்து வீச்சு மேலும் வலுவடையும். அவர்களின் சுழல் தாக்குதலை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ரன்குவிப்பு அமையும்.

இரண்டிலும் வெற்றி :

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டாஸ்’ ஜெயித்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதலில் பேட்டிங்கையை தேர்வு செய்துள்ளது. 

அதனால், இந்த ஆட்டத்தில் டாஸ் சூட்சுமம் ஒரு பிரச்சினையாக இருக்காது. பார்க்கலாம்..!
*

Share this story