நாளைய ஆட்டத்தில், புதிய மைல் கல்லை எட்டுகிறார் விராட்கோலி..

By 
virat500

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒரு டெஸ்ட் நிறைவடைந்த நிலையில் அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.

அதாவது இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில், கோலி நாளை இணைய உள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் விராட் கோலி களம் இறங்கினால் அது அவருடையை 500வது சர்வதேச போட்டி ஆகும்.

இந்திய அணிக்கான இந்த மைல்கல்லை எட்டும் 4வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் ஆடி முதல் இடத்திலும், எம்.எஸ்.தோனி (538) 2ம் இடத்திலும், ராகுல் திராவிட் (509) 3ம் இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்காக 500 சர்வதேச போட்டிகளில் ஆடிய 4வது வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி நாளை படைக்க உள்ளார்.

 

Share this story