சேப்பாக் ஸ்டேடியத்தில், இன்று லக்னோவை வீழ்த்தி, வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி?

By 
msdo

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 6-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. 

தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி குஜராத்திடம் தோல்வி அடைந்தது. சென்னை அணி நிர்ணயித்த 179 ரன் இலக்கை குஜராத் 4 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. 

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (92 ரன்), மொயீன் அலி (23 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. பந்துவீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹேங்கர்கேகர் 3 விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி முதல் முறையாக உள்ளூரில் விளையாட இருக்கிறது. 

ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும். சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். 

இங்கு 56 ஆட்டங்களில் ஆடி 40-ல் வெற்றிகளைக் குவித்துள்ள சென்னை அணி இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் டெல்லியை பந்தாடியது. 

புயல்வேகத்தில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 14 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதே நம்பிக்கையுடன் 
இன்றைய ஆட்டத்தையும் எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: 

சென்னை அணியில், டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, 

ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் ஆகியோர் உள்ளனர்.

லக்னோ அணியில், லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணால் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், 

ஆயுஷ் பதோனி அல்லது கிருஷ்ணப்பா கவுதம், ஆவேஷ்கான், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், மார்க்வுட் ஆகியோர் உள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

Share this story