அதிரடி ஆட்டத்தால, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துட்டார் நம்ம 'தல' : டோனி ரசிகர்கள் சரவெடி
 

By 
With the action game, our 'head' responded to the criticism Tony fans Saravedi

மிகவும் முக்கியமான ஆட்டத்தில் டோனி திறமையை வெளிப்படுத்தி, இந்த வயதிலும் தன்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் டெல்லியை வீழ்த்தி, சென்னை அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

துபாயில் நடந்த ‘குவாலி பையர் 1’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. 

இதனால், சென்னை அணிக்கு 173 ரன் இலக்காக இருந்தது.

பிரித்வி ஷா 34 பந்தில் 60 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரி‌ஷப்பண்ட் 35 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மையர் 24 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். 

ஹாசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா, மொய்ன்அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர், ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில், இலக்கை எடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

வெற்றிக்கு முக்கிய பங்கு :

சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ராபின் உத்தப்பா 44 பந்தில் 63 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். டாம்கரண் 3 விக்கெட்டும், நோர்ட்ஜே, அவேஷ்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

உத்தப்பா, ருதுராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், கடைசி நேரத்தில் டோனியின் அதிரடியான ஆட்டமே வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. 

அவர் 6 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 18 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

கடைசி 5 பந்தில் 13 ரன் தேவைப்பட்ட போது டோனி அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்து முத்திரை பதித்தார். 4 வது பந்தில் வைடு (எக்ஸ்ட்ரா) மூலம் ஒரு ரன் கிடைத்தது. 

அதற்கு அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

விமர்சனங்களுக்கு பதிலடி :

40 வயதான டோனியின் ஆட்டம் இந்த சீசனில் சிறப்பாக இல்லை. இதனால், அவரது பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அவர் பதிலடி கொடுத்தார். இதனை அவரது ரசிகர்கள், வைரலாய் கொண்டாடி வருகின்றனர்.

மிகவும் முக்கியமான ஆட்டத்தில், டோனி திறமையை வெளிப்படுத்தி, இந்த வயதிலும் தன்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

இந்த அதிரடி வெற்றி குறித்து எம்.எஸ்.டோனி கூறியதாவது :

'எனது இன்னிங்கிஸ் முக்கியமான ஒன்றாகும். டெல்லி அணி பந்துவீச்சில் பலம் பொருந்தியது. இந்த ஆடுகளத்தில், அவர்களது பந்தை எதிர்கொள்வது சவாலானது என்பதை நாங்கள் அறிவோம்.

பயிற்சியின்போது, எனது பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனாலும், களத்தில் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. 

பந்தை சரியாக கணித்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.

ருதுராஜ் கெய்க்வாட், உத்தப்பா பேட்டிங் சிறப்பாக இருந்தது. உத்தப்பா முன்வரிசையில் ஆட விரும்பியதால், 3-வது வரிசைக்கு அனுப்பப்பட்டார். 

மொய்ன் அலியும் 3-வது வரிசையில் சிறப்பாக ஆடக்கூடியவர். சூழ்நிலையை பொறுத்து 3-வது வரிசைக்கு வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

கடந்த சீசனில் தான் நாங்கள் முதல் முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஒருசில ஆட்டங்களை தவற விட்டோம். 

ஆனால், இந்த சீசனில் வலுவாக திரும்பி வந்து இருக்கிறோம்' என்றார்.

Share this story