உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

By 
World Badminton Tournament Srikanth-Sindhu Cema Kushi ..

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது. 

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-7, 21-9 என்ற நேர்செட்டில் மார்ட்டினா ரெபிஸ்காவை (சுலோவக்கியா) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முந்தைய 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். 

24 நிமிடத்தில் அசத்தல் :

இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு வெறும் 24 நிமிடங்களே தேவைப்பட்டது. சிந்து அடுத்து தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவோங்கை எதிர்கொள்கிறார். 

கடந்த வாரம் நடந்த உலக டூர் இறுதி சுற்றின் லீக் ஆட்டத்தில், இதே சோச்சுவோங்கிடம் சிந்து தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த்-லக்‌ஷயா :

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 15-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் லி ஷி பெங்கை (சீனா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். 

இதேபோல், இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 22-20, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) வெளியேற்றினார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. 

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 27-25, 21-17 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் லீ ஜெ ஹூய்- யாங் போ ஹூவான் ஜோடியை விரட்டியடித்தது.

பதிலடி :
 
பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். 

அவரை 22-ம் நிலை வீரரான லோ கியான் யேவ் (சிங்கப்பூர்) 14-21, 21-9, 21-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

இதன் மூலம், சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் இறுதி ஆட்டத்தில் அவரிடம் அடைந்த தோல்விக்கு லோ கியான் பழிதீர்த்துக் கொண்டார்.

Share this story