உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 : தகுதி பெற்றன இரண்டு நாடுகள்..

By 
World Cup 2022 Two countries qualify.

உலக கோப்பை கால்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை கத்தாரில் நடக்கிறது.

இந்த போட்டியில், 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டுமே நேரடியாக விளையாடும். மீதியுள்ள 31 நாடுகளும் தகுதிச் சுற்று மூலமே முன்னேற முடியும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

4 முறை சாம்பியனான ஜெர்மனி, டென்மார்க், 5 முறை கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், செர்பியா, 1966- ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே வரிசைப்படி தகுதி பெற்று இருந்தன.

அர்ஜென்டினா-நெதர்லாந்து :

இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்து ஆகிய அணிகள், உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

சான்ஜூயான் நகரில் நடந்த தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினா- பிரேசில் அணிகள் மோதின. 

இந்த ஆட்டம் கோல் எதுமின்றி, டிரா ஆனது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியால் கோல் போட முடியவில்லை.

இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், அர்ஜெண்டினா அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. தென் அமெரிக்க கண்டத்தில் தகுதி சுற்றில் முதல் 4 இடங்களில் அந்த அணி உள்ளது.

அர்ஜெண்டினா உலக கோப்பை போட்டிக்கு 18-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. இதில் 2 முறை (1978, 1986) சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இதேபோல, ஐரோப்பிய கண்டத்தில் நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் நார்வேயை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

12 நாடுகள் :

ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றான நெதர்லாந்து கடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தற்போது அந்த அணி வீரர்கள் தகுதி சுற்றில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

நெதர்லாந்து அணி 10-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 3 முறை 2-வது இடத்தை பிடித்துள்ளது.

உலக கோப்பை போட்டிக்கு, இதுவரை 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 19 நாடுகள் தகுதிபெற வேண்டியுள்ளது. 
*

Share this story