உலகக் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி.. இன்றைய ஆட்ட விவரம்

By 
World Cup of Hockey Indian team suffered a shock defeat .. Today's match details

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

தகுதி :

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

முதல் நாளான நேற்று இரவு ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. 

இதில், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதலாவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கேப்டன் டிமோதி கிளமென்டும், 7-வது நிமிடத்தில் பெஞ்சமினும் கோல் அடித்தனர். 

துரிதமாக சுதாரித்து கொண்ட இந்திய அணியினர் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பி சமநிலைக்கு கொண்டு வந்தனர். 

10-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும், 15-வது நிமிடத்தில் சஞ்சய்யும் இந்த கோல்களை அடித்தனர். அதன் பிறகு, இந்திய அணி சில பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்தது பாதகமாக அமைந்தது.

இரு கேப்டன்கள் :

அதேநேரத்தில் பிரான்ஸ் அணியின் கேப்டன் டிமோதி கிளமென்ட் 23-வது, 32-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கி தங்கள் அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். 48-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் செலியர் கோல் அடித்ததால் அந்த அணியின் முன்னிலை மேலும் அதிகரித்தது. 

இந்த பரபரப்புக்கு மத்தியில் 57-வது, 58-வது நிமிடங்களில் இந்திய அணியின் துணை கேப்டன் சஞ்சய் பெனால்டி, கார்னரில் அடுத்தடுத்து இரு கோல் போட்டார். ஆனால், கடைசி நேர இந்த கோல்கள் வெற்றிக்கு உதவவில்லை. முடிவில், பிரான்ஸ் 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

முன்னதாக நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி அணி 5-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும் பந்தாடியது. 

இதேபோல், போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவையும் (பி பிரிவு), மலேசியா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியையும் (ஏ பிரிவு) சாய்த்தது.

இன்றைய ஆட்டம் :

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-எகிப்து (காலை 9.30 மணி), நெதர்லாந்து-தென்கொரியா (பகல் 12 மணி), ஸ்பெயின்-அமெரிக்கா (பிற்பகல் 2.30 மணி), பிரான்ஸ்-போலந்து (மாலை 5 மணி), கனடா-இந்தியா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Share this story