கிரிக்கெட் உலகம் : இந்தியா வந்த ஆப்கன் வீரர்களுக்கு பட்டாடையுடன் வரவேற்பு..

By 
afn

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்கான் அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இது உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா சாஹிதி கேப்டனாக இருக்கிறார். இவர் தவிர ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சாட்ரான், ரியாஸ் ஹாசன், ரகமது ஷா, நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகிள், அசமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரகுமான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
 

Share this story