தமிழகத்தில் 2 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன; 1,500 கோடி ரூபாய் இழப்பு

By 
st6

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் சுமார் 2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிற்சாலை களும் இன்று மூடப்பட்டன. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தம் காரணமாக மூடபப்ட்டன.

குறிச்சி, சிட்கோ, கணபதி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கிடந்தன. மேலும் அந்தந்த தொழிற்சாலைகள் முன்பு கருப்பு கொடியும் ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு தொழில்துறையினர் திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மேலும் சிவானந்தா காலனியில் உள்ள மின் அலுவலகத்துக்கும் சென்று மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்து க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2-வது பெரிய தொழிற்பேட்டையான கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 600-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன.

இந்தக் கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கதவடைப்பு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழில் கூடங் கள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தொழில்கள் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பழங்கா நத்தத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை குறைக்க வலியு றுத்தி கவன ஈர்ப்பு உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், 100-க்கும் மேற்பட்ட ஆயில் மில்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் அரிசி ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

தற்போது தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போரா ட்டத்தில் இறங்கியுள்ளன. தொழில்துறையினர் இந்த போராட்டம் காரணமாக இன்று மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 


 

Share this story