தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய 2 வாலிபர்கள், பரிதாப பலி..
 

By 
acci77

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிக்கள் விடிய விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருவிழாவை காண முத்துப்பேட்டை உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (வயது 17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர் தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன் (24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இரவு முழுவதும் கண் விழித்து திருவிழாவில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் வந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் அருண் என்பவர் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

பரத்குமார் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்தனர். அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பரத்குமாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின்னர், அரைமணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. திருவிழாவை காண வந்த வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Share this story