3 யானைகள் பரிதாப பலி : வனத்துறை விசாரணை..

 

elephant

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வயர்கள் அமைத்து உள்ளார்.

இந்த மின் வயர்கள் நேரடியாக மின்சார கம்பத்தில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார். நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசன் தோட்டத்திற்குள் புகுந்தது.

அப்போது விளைநிலத்தில் இருந்த மின்சார கம்பியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது. இதனை இன்று காலை அந்த வழியாக விவசாய விளைநிலத்திற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்தில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம விவசாய நிலத்திற்கு வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனபகுதிகளுக்கு விரட்டாமல் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 13.5.2022 அன்று மக்னா காட்டு யானையும், சில நாட்களுக்கு பிறகு கூலி தொழிலாளி ஒருவரும் மின்சாரம் தாக்கி விவசாய நிலத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this story