அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பெண்கள் மரணம்..

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் செம்மலர் என்ற பெண் கடந்த செப்.03ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு செப்.05 ஆம் தேதியன்று குப்பி என்ற பெண்ணும் குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த மரணங்களை ஆவணங்களில் பதிவு செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இரு மகப்பேறு மரணங்கள் தொடர்பாக தணிக்கை செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நடந்தது என்ன? மகப்பேறு பிரிவில் பெண்கள் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் மாற்றினார்களா?
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ளது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை. சென்னையைப் போல இங்கும் அரசு சார்பாக இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரிலிருந்தும், மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் பிரசவத்திற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வருவது வாடிக்கையான ஒன்று.
மதுரையில் ஆண்டுக்கு 43 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் இறப்பு விகிதம் ஒரு லட்சம் குழந்தைகளில் 13 குழந்தைகள் என உள்ளது. அதேபோல் தாய்மார்கள் இறப்பை பார்க்கும் போது 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 30 பெண்கள் மகப்பேறு காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 16 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டில் தற்போது வரை 7 பெண்கள் பிரவசத்தின் போது உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்ய மதுரை மாநகர சுகாதார அலுவலரான மருத்துவர் வினோத், ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்று பெண்ணின் ரத்த மாதிரியை பெற்றுச் சென்றார்.
ஆனால் மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவ அலுவலர், மகப்பேறு பிரிவிற்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களை மிரட்டி ரத்த மாதிரிகளை வினோத் பெற்றுச் சென்றதாக கூறுகிறார்.
இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த இரண்டு மகப்பேறு மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மருத்துவ அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், பெண்கள் இறப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கைக்கும், ஆட்சியரிடம் அளித்த அறிக்கைக்கும் இடையே பல்வேறு முரண்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக தாய்மார்கள் இறப்பிற்கான காரணங்கள், இறப்பின் போது அவர்களுக்கு இருந்த உடல் உபாதைகள் போன்ற தகவல்கள் மாறுபட்டிருந்தன. மேலும் சில இடங்களில் திருத்தம் செய்யப்படும், கையெழுத்து மாற்றப்பட்டும் இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக ராஜாஜி மருத்துவமனையின் டீன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு, மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை செய்யக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழுவினர் தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர். அந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்", எனக் கூறினார்.