ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; காரணம்..

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர். இவரது மனைவி லக்சஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்பவரும் வசித்து வந்தார்.
6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர். போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.